Thursday, June 23, 2011

கத்தரிக்காய் க்ரேவி அல்லது காரக் குழம்பு ஒரு சமையல் குறிப்பு

ரொம்ப நாளாச்சு..சமையல் பதிவு போட்டு. அதா வந்துட்டேன் கரண்டியும் கடாயுமாக. இப்பெல்லாம் டிவியில் எந்த சானலை, எந்த நேரம் போட்டாலும் யாரவது ஒருத்தர், கரண்டியும் கடாயுமாக வர ஆரம்பிச்சுட்டாங்க.

கத்திரிக்காயில் ஒரு கார கிரேவி அல்லது குழம்பு செய்யப் போறேன். வர்றீங்களா?

தேவையானவை:

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ நாலாக வகுந்தது
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, பட்டை, சோம்பு
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மல்லி, ஜீரகப் பொடிகள், உப்பு அனைத்தும் தேவைக்கேற்ப.
கரைத்த புளித் தண்ணீர் சிறிய கப்
தேங்காய், கசகசா அரைத்த விழுது



கடாயில் எண்ணை ஊற்றி பட்டை சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் வகுந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு நன்கு பிரட்டி, மூடி போட்டு மூடி வைக்கவும். அதிலுள்ள நீரிலேயே கத்தரிக்காய் நன்கு வெந்ததும் சிறிது நேரம் பிரட்டி கொடுக்கவும். கொஞ்சம் ப்ரை ஆனதும்,


புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா விழுதை சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும்,


பொடியாக அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.


சூடான சாதத்தோடு அருமையாயிருக்கும். மேலும் புலாவ், சப்பாத்திகூடவும்
சந்தோஷமாக சொந்தம் கொண்டாடும்.
brinjal நல்ல பிriஞ்சaகவும் காரலில்லாமலும் இருக்கணும்.

Friday, February 11, 2011

புளி பாஸ்தா தயிர் பாஸ்தா - சமையல் குறிப்பு

இன்று டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி பாத்தேன். பாஸ்தாவை வைத்து புளீயோதரை மாதிரி செய்து காட்டினார்கள். நல்லாருந்துது.” இது நம்ம ரங்ஸ்.
இன்றைய மெனு இதுதான் என்றும் சொன்னார்.

எனக்கும் இது நல்லாருக்கே...நல்லாவும் வரும் போலிருக்கே என்று நான் ரெடி பண்ணி வைத்திருந்த காய்கறிகளை கவரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு அடுப்பில் புளிக்காய்ச்சல் தயார் செய்ய ஆரம்பித்தேன்.அப்படியே மற்றொரு அடுப்பில் பாஸ்தாவை வேக வைத்தேன்.

ஏது பாஸ்தா திடீரென்று? அதான் உடனே கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாரே!!!!!

வெந்த பாஸ்தா குளிர்ந்த நீரில் நன்கு அலசி வடிகட்டியில். உதிருதிராக வர வேகும் போதே தண்ணிரில் சிறிது எண்ணை அல்லது நெய் விட்டால் ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணை விட்டு காய்ந்ததும் கைப்பிடி கறிவேப்பிலை பொறித்து, தேவையான அளவு தயார் செய்த புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறி அதனுடன் பாஸ்தாவை போட்டு மெதுவாக கிளறி கொத்தமல்லி தூவி ரெடியாக இருக்கிறது.


நல்லாத்தாங்க இருந்துது.
புளி பாஸ்தா...சேரி...நம்ம கோடவினிலிருந்து வந்தது ஓர் ஐடியா!!!!

தயிர் பாஸ்தா!!! மொத்த பாஸ்தாவில் மூன்றில் ரெண்டு பங்கு புளி பாஸ்தாவுக்கும் மீதி ஒரு பங்கு தயிர் பாஸ்தாவுக்குமாக தனித்தனியே பிரித்து வைத்திருந்தேன்.
தயிர் பாஸ்தாவுக்கான தாளிதம்....கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மாங்காயிஞ்சி, கலர் கொடமொழகாக்கள், பச்சை தராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!!!


அருமையாக, மேற் சொன்னவற்றையெல்லாம் தாளித்து பாஸ்தா மேல் கொட்டியாச்சு!

தயிரும் ஊத்தியாச்சு!!

குழைய கிளறிய தயிர் பாஸ்தாவும் கார சாரமாக கிளறிய புளி பாஸ்தாவும்.

எல்லோரும் கிண்ணமும் ஸ்பூனுமாக ஓடியாங்கள்......வேண்டியதை அள்ளிக்கொள்ளுங்கள். வேண்டியது என்ன வேண்டியது...? ரெண்டுமே நல்லாத்தானிருந்தது.

Sunday, July 11, 2010

கோதுமை ரவா தோசை - சமையல் குறிப்பு

வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்ல உண்டதில்லை.

என் மகளின் மெனுகார்டில் உள்ளது இந்த கோதுமை ரவா தோசை!!

எப்படி செய்வது?

அரை கப் கோதுமை ரவையை(பொடி ரவை) ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். அதோடு ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் அரிசிமாவு கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்.

கொஞ்சம் நீர்க்க இருக்கலாம், அப்போதுதான் தோசை முறுகலாக வரும்.
அதோடு பொடியாக அரிந்த வெங்காயம் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-காரத்துக்கேற்ப, ஜீரகம்,மிளகு ஒரு டீஸ் ஸ்பூன், உப்பு சேர்த்து தயாராக்கவும்.

ஆங்..! மானே தேனேயை மறந்துவிட்டேனே!! அதாங்க கறிவேப்பிலை, கொத்தமல்லி!!!அவற்றையும் பொடியாக அரிந்து போட்டுக்கோங்க. சேரியா?

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி நன்கு காய்ந்ததும் கல்லின் ஓரங்களில் ஊற்றவும். அங்கிருந்து வழிந்து மீதி மாவு நடுவில் சேரும். சுற்றிலும் எண்ணை அல்லது நெய் ஊற்றி
இருபக்கமும் முறுகவிட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்கு இழையும்.

சூப்பராயிருக்கும் இத்தோசை ஊற்ற ஊற்ற டைனிங் டேபிளுக்கு போய்க் கொண்டேயிருக்கும், அடி பிடின்னு. ஊற்றுபவருக்குத்தான் கை வலிக்கும், அவருக்கும் டேஸ்ட்டுக்குக் கூட மிச்சம் மீதி இருக்குமோ என்னவோ?

Friday, December 4, 2009

ஒரு காரம் ஒரு இனிப்பு.....ஒரே கிழங்கிலே ஒரே பதிவிலே

ஒரே கிழங்கைக் கொண்டு இரு வேறு சுவைகளில் சமைக்க முடியுமா? முடியும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு.......நாங்க செல்லமாய் அழைக்கும் சீனிக்கிழங்கு. இதை வைத்துத்தான் ரெண்டு டிஷ் தரப் போகிறேன்.
ஒன்று இனிப்பு மற்றது காரம். சேரியா?

இனிப்புக்குத் தேவையானவை:
சீனிக்கிழங்கு...........கால் கிலோ
பனங்கருப்பட்டி.....ரெண்டு சிரட்டை
சுக்குப்பொடி............ரெண்டு தேக்கரண்டி
ஏலப்பொடி...............ரெண்டு தேக்கரண்டி

எப்படி செய்வோமடி:
முதலில் சீனிக்கிழங்கை அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அளவாக வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உறித்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் ஒரு கடாயில் வடிகட்டி அடுப்பில் கொதிக்கவிடவும். அதில் சுக்கு, ஏலப் பொடியை சேர்க்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை சேர்த்து
மெதுவாக கிளறவும். கருப்பட்டி பாகு இறுகி வரும் போது அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும் இந்த பதார்த்தம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரிடமிருந்து அறிந்து கொண்டது. சுக்கு ஏலக்காய் மணமும் கருப்பட்டிப் பாகும் சேர்ந்து அருமையாயிருக்கும்.

அடடா....! படத்தில் ஒரு கருப்பட்டிச் சிரட்டையையும் வைக்க மறந்தேனே!!!!

இனி காரம் பக்கம் போவோமா? போ...வோமே!!!
இது என்னோட டிஷ். உருளைக்கிழங்கிலேதானே காரக் கறி செய்திருப்பீர்கள்?
இங்கே நான் அதையே சீனிக்கிழங்கிலே செய்திருக்கிறேன்.
எப்படின்னு பாக்கலாமா? ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க. வெரி சிம்பிள்.
முதலில் சொன்னது போல் வேக வைத்து வட்டமாக நறுக்கிய சீனிக்கிழங்கு.
பின் ஒரு பௌலில்
மஞ்சள் பொடி..........................ரெண்டு தேக்கரண்டி
ஜிரகப்பொடி................................ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி..............................ரெண்டு தேக்கரண்டி
மிளகாய்பொடி.............................ரெண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி.......ரெண்டு தேக்கரண்டி
உப்பு....................................................தேவையான அளவு

மேற் சொன்ன பொடிகளை ஒரு பௌலில் போட்டு கலந்து அதோடு வேகவைத்து நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை கலந்து பொடிகள் ஒன்றுபோல் கிழங்கில் ’கோட்’ ஆகுமாறு நன்றாக குலுக்கி,
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீனிக்கிழங்கை கடாயில் விட்டு கிளறவேண்டும். நல்ல முறுகலாக வரும் வரை பிரட்டி எடுத்து தட்டில் மாற்றிப் பரிமாறவும். இனிப்பும் காரமும் கலந்த ஒரு சுவையில் அபாரமாயிருக்கும்

இம்மாம் பெரிய மிளகாயெல்லாம் போட்டால்....படுகாரமாயிருக்கும்!!!
இரண்டு சுவையுமே எனக்குப் பிடித்தவைதான். இதைப் படிச்சவங்களும் புடிச்சவங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்களேன்.

Saturday, July 4, 2009

பொரிச்ச மிளகாய் சம்பல்

நீண்ட நாட்களாக யாரையும் இந்த பக்கம் காணவில்லை.

அதான் சும்மா ஒரு விளையாட்டு சமையல் குறிப்பு.

ஈழத்து முற்றத்திலை மணிமேகலை ஆச்சி மாங்காய் சம்பல் செய்முறை போட்டிருக்கிறா.

அந்த செய்முறைக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உரலிலை இடிக்கிறது.

தேவையான பொருட்கள்

1. செத்தல் மிளகாய் - 8 (அல்லது உங்களால் தாங்க கூடிய காரத்துக்கு ஏற்ற அளவு)
2. தேங்காய் பூ - ஒரு பாதி தேங்காய் துருவி எடுத்தது/ காய்ந்த தேங்காய் பூ எனில் 1 கப்
3. உப்பு - தேவைக்கு ஏற்ப
4. சின்ன வெங்காயம் - 4 அல்லது 5
6. நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - ஒரு நெட்டு
9. எண்ணேய் - 2-3 மேசைகரண்டி
10. எலுமிச்சை - பாதி அல்லது பிசந்த பழப்புளி 2 மேசைகரண்டி

10- உரல்,உலக்கை; இல்லாவிட்டால் (food processor)









செய்முறை

1. பொரிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை விட்டு சூடக்கவும்.
2. சூடான எண்ணேயில் செத்தல் மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும் (கருகது எடுப்பது முக்கியம்)
3. அதே எண்ணேயில் நற்சீரகம், கறிவேப்பிலையையும் போட்டு பொரித்து எடுக்கவும்.



4. வெங்காயத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்
5. பொரித்த மிளகாயை உரலில் இட்டு பொடியாக்கவும்,
6. பொடியாக்கிய மிளகாயுடன், சீரகம், உரித்த வெங்காயம், பொரித்த கறிவேப்பிலை, உப்பு என்பவற்றை சேர்த்து நன்கு பொடியாக்கவும்
7. பொடியாக்கிய கலவையுடன் துருவி வைத்த தேங்காய் பூவை இட்டு நன்கு இடித்து, இறுதியில் எலுமிச்சை அல்லது பழப்புளி கலந்து இடித்து உரலில் இருந்து எடுத்தால் சுவையான பொரிச்ச மிளகாய் சம்பல் தயார்.

இதனை ரொட்டி, தோசை என்பவற்றுடன் உண்ணலாம்.










உடன் தேங்காய்ப்பூ கிடைக்காவிட்டால்

* 1 கப் உலர்ந்த தேங்காய்பூவுக்கு 1/2 கப் நீர் சேர்த்து 30 செக்கன் மைக்கிரோ வேவ் அவனில் வைத்து பாவிக்கலாம்.
** உரல் உலக்கை இல்லாவிட்டல் Food processor இல் மேலே சொன்ன ஒழுங்கில் போட்டு அடித்து எடுத்தால் கிட்ட தட்ட இதே போல சம்பல் கிடைக்கும்.

Monday, April 6, 2009

பூண்டு குழம்பு

பூண்டுகுழம்பு
இதைப் படிச்சிட்டு சின்ன வெங்காயம் இல்லாமல் பூண்டுக்குழம்பு
செய்ய முடிஞ்சா ரெசிப்பி கொடுங்கன்னு கேட்ட தூயாவுக்கா
இந்தப் பதிவு.

தேவையான சாமான்கள்.

பெரிய வெங்காயம்- 3
தக்காளி- 4
இஞ்சி- 1 சிறிய துண்டு
பூண்டு- தோலுரித்தது 1 கப்

புளித்தண்ணீர் - கப்
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப
எண்ணைய் - 2 ஸ்பூன்
கடுகு- கொஞ்சம்

வறுக்க தேவையான சாமான்கள்:
வாணலியில் கொத்துமல்லிவிதை,
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு- தலா 1 ஸ்பூன்
மிளகாய்வற்றல்(5), மிளகு சீரகம் கொஞ்சம்
போட்டு வறுத்து பொடி செய்து வைக்கவும்.

செய்முறை:
வெங்காயம், தக்காளி, இஞ்சி
ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,
கறிவேப்பிலை தாளித்து பூண்டை போட்டு
வதக்கவும்.

கொஞ்சம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும்
விழுது, உப்பு, மஞ்சள், வறுத்து அரைத்து
வைத்திருக்கும் பொடி, புளித்தண்ணீர்
ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

(அதிகம் கெட்டியாக இருந்தால் கொஞ்சம்
தண்ணீர் சேர்க்கலாம்)

Sunday, April 5, 2009

உருளைக்கிழங்கு அல்வா - நான் ஸ்டெஃபிக்ராபா? சானியா மிர்ஸாவா? - சமையல் குறிப்பு

நவராத்திரிக்கு வந்த குடும்பக் கூடலில் ஒரே ரகளை, செல்ல ரகளைதான்.'நீ என்ன செய்யப் போற?''உனக்கு எது நல்லா வரும்?''அப்ப நீ?''போன முறை செய்தது நல்லாலே. வேற கொண்டு வா!'
நான் மட்டும் மௌனமாக டென்னிஸ் மாட்ச் பாப்பது போல் ரெண்டு கோர்ட்டையும் அதாவது எல்லோர் முகங்களையும் மாறி மாறி பாத்துக்கொண்டிருந்தேன்.
புரியலையா? நவராத்திரி முடிந்து மறு மாதம் வரப்போகும் தீபாவளிக்கு யார் யார் என்னென்ன பலகாரங்கள் செய்து கொண்டு வரப் போகிறார்கள் என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல்தான். ஒவ்வொரு விசேஷங்களுக்கும் வேறுவேறு ஊர்களில் வேலை நிமித்தமாக இருக்கும் என் புகுந்த வீட்டு அங்கத்தினர்கள், நாத்தனார்கள் ஓரகத்திகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.
குறிப்பிட்ட அந்த வருடம் எனக்கு கல்யாணத்துக்குப் பிறகு வரும் முதல் தீபாவளி. சமையலில் 'சுழியம்' . அவ்ர்கள் பேசுவதையே "ஞே!" என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.எல்லோரும் பெரிய மனது பண்ணி என்னைப் பார்த்து, 'நீ ஒன்றும் செய்ய வேண்டாம்!' என்றார்கள். அதாவது 'உப்புக்குச் சப்பையாயிரு!'
அந்த வருடம் தீபாவளிக்கு ரெண்டு நாட்கள் முன்பே எல்லோரும் கூடி விட்டோம்.அதிரச மாவு கிண்டி எடுத்து வந்த பெரிய நாத்தனார், 'எங்கூட வந்து அதிரசம் தட்டிக் கொடு'என்றார்கள். அது முடிந்ததும் தட்டைக்கு அரைத்து வைத்திருந்ததை எல்லோருமாக தட்டிக் கொடுங்க, நான் வெந்து எடுக்கிறேன் என்றார் மாமியார் அதையும் மற்றவர் செய்வதைப் பாத்துப் பாத்து சொளவு மேல் விரித்திருந்த வெள்ளைத்துணியில் தட்டித் தட்டிக் கொடுத்தேன்.
இவ்வாறு "டென்னிஸ் கோர்ட்டின் பிக்கர் பாய்" ரேஞ்சுக்கு சொன்னதையெல்லாம் செய்து கொண்டிருந்தேன்.
அடுத்த வருடம் வந்தது. இனிமே பிக்கர்பாயா? நோ சான்ஸ்!!என்று நானும் ஆடுவேன் என்று டென்னிஸ் ராக்கெட்டை...கரண்டியை கையில் எடுத்துக்கொண்டு ஆடு களம் புகுந்தேன். "ஆரு சாப்பிடுவாக?" என்ற கேலிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த வருடம் நான் செய்து கொண்டு போயிருந்ததுதான்......"உருளைக் கிழங்கு அல்வா!!!"

ஒருவருட காலத்தில் சுழியத்திலிருந்து நூறு வரை எண்ணக் கற்றுக் கொண்டேன்.

எப்படி செஞ்சேன்னு தெரியணுமா?
நல்ல ஊட்டி உருளை அரைக்கிலோ வேக வைத்து நன்றாகக் கட்டியில்லாமல் மசித்தது.சர்க்கரை ஒரு கிலோநெய் அரைக்கிலோமுந்திரி பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது தேவையான அளவு.சிறிது இளஞ்சூடான பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(அப்பாநிறையகொடுப்பார்கள்), பச்சைக்கற்பூரம், ஏலக்காய் சிறிது, சிறிது அளவு.கேசரிப் பௌடர் கலருக்குத் தேவையான அளவு.அரை டம்ளர் பால், சர்க்கரையில் அழுக்கெடுக்க.
வெண்கல உருளியில்(இப்போது தண்ணீர் ஊற்றி பூக்கள் போடுவதுக்கு) சர்க்கரையைப் போட்டு எரியும் அடுப்பில் வைத்து அது கரையும் அளவு தண்ணீர் ஊற்றவும். நன்கு கரைந்து கொதித்து வரும் போது பாலை ஊற்றினால் சிறிது நேரத்தில் அழுக்கு திரண்டு பாத்திரத்தின் ஓரத்தில் குழுமும். ஜல்லிக்கரண்டியால் அவற்றை திரட்டி எடுக்கவும்.
பாகு சிறிது கம்பிப்பதம் வந்ததும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிண்டவும். எப்படியும் சிறிது கட்டிகள் இருக்கும் மசிக்கும் கரண்டியால் கட்டியில்லாமல் கிண்டிக்கொண்டே மசிக்கவும். கேசரிப் பௌடரை தேவையான கலர் வரும் வரை சேர்க்கவும்
இப்போது கட்டியில்லாமல் உருளை சர்க்கரைப் பாகில் ஒன்றாக சேர்ந்து கொதிக்கும். பெரிய கரண்டியால் அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டேயிருக்கவும். அப்பப்ப, 'மானே தேனே' மாதிரி நெய்யை விட்டுக்கொண்டேயிருக்கவும். கிட்டத்தட்ட அரைக் கிலோ நெய்யையும் வாங்கிவிடும்.
உருளைக் கிழங்கு அல்வா உருளியில் ஒட்டாமல் சுருண்டு வரும். வாங்கிய நெய்யையெல்லாம் திருப்பித்தரும். உடனே திருப்பி வாங்கிக்காதீங்க. அதிலேயே இருக்கட்டும்.இப்போது குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய், விரல்களில் நசுக்கிய பச்சைக்கற்பூரம் துளி அளவு,வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் ஓரங்களில் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் தேவையான பாத்திரத்துக்கு மாற்றி நன்கு ஆறியவுடன் மூடி வைத்துக்கொள்ளவும்.
தீபாவளிக்குப் போகும் போது நெய்வழியும் அல்வாவை பெருமை வழிய எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனேன்.
ஆஹா! நானானி ஏதோ கொண்டுவந்திருக்கிறாள். எல்லோரும் ஓடிவாங்க என்று சுற்றமெல்லாம் கூவ.....பாத்திரத்தைத் திறந்ததுதான் தாமதம்! கும்மென்ற குங்குமப்பூ, நெய், ஏலக்காய் வாசனை தூக்கியடித்தது. ஆளாளுக்கு கிண்ணமும் ஸ்பூனும் கொண்டுவந்து அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டு வாயில் போட அல்வா தொண்டையில் வழுக்கி வழுக்கி விழுந்தது.நல்லாருக்கு நல்லாருக்கு என்று கொண்டுபோன பாத்திரம் காலி!!!!நான் எப்படியிருக்கு என்று டேஸ்ட் கூடப் பாக்கவில்லை. எனக்கே அல்வா கொடுத்திட்டாங்க!! ஆனா மனசு மத்தாப்பூப் போல பூப்பூவா சொரிந்தது.
இப்ப சொல்லுங்க பிக்கர்பாயா இருந்த நான் இப்ப 'ஸ்டெஃபிக்ராபா? சானியா மிர்ஸாவா?'ஸ்டெஃபிதான் அவர்தான் ஜெயிச்சுக்கொண்டே இருந்தார்.

இப்படியிருந்த நான்......


எப்படி ஆயிட்டேன்!!!!!!!!!